புத்தகத்தின் பெயர் :கட்டுரைகளும் சொற்பொழிவுகளும்
ஆசிரியர் : அஜய்குமார் கோஷ்
வெளியீடு :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
விலை : ரூ150./-
பக்கம் 456

புத்தக மதிப்புரை:

அஜய் குமார் கோஷ், “கட்டுரைகளும் சொற்பொழிவுகளும்” என்ற புத்தகத்தை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் மொத்தம் பதினொரு கட்டுரைகள் உள்ளன.

ஒட்டு மொத்தத்தில் -சர்வதேச நிலைமை, இந்தியப் புரட்சிகர இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றிய, ஆற்றவேண்டிய பணிகள் ஆகியவை குறித்து இளம் தலை முறையினர் அறிந்து கொள்ள இக்கட்டுரைகள் பெரும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளன. நேற்றைய செய்திகள் இன்றைக்கு வரலாறு அல்லவா? அதுவும் நேரடி வரலாற்றுப் பதிவு அல்லவா? இடது சாரி இயக்கங்கள் தங்களை சுயபரிசீலனை செய்து முன்னேற இத்தகைய பதிவுகளை படிப்பது அவசியம் அல்லவா? ‘பகத்சிங்கும் அவரது தோழர்களும்’ என்ற கட்டுரையில் அஜய்கோஷ் அவர்கள் பகத்சிங்குடன் அந்த வழக்கில் அவரும் ஒரு குற்றவாளியாக இருந்தார்.

“அந்த வழக்கில் ஒன்பது மாதங்கள் வரையிலும் விசாரணை நடந்தும், சர்க்கார் தரப்பு சாட்சிகள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே விசாரிக்கப்பட்டிருந்தும். வழக்கு விசாரணை திடீரென நிறுத்தப்பட்டது.”

“1930 -ஆம் ஆண்டு லாகூர் சதி வழக்கு அவசரச் சட்டம் என்ற விசேட அவசரச் சட்டம் வைஸ்ராய் அவர்களால் பிறப்பிக்கப்பட்டது. அது ஒரு கொடிய சட்டமாக இருந்தது. இந்தச் சட்டப்படி எங்களை ஒரு பிரத்யேக நீதிமன்றம் விசாரணை செய்யும். அவசியமானால் நாங்கள் இல்லாமலே விசாரணை நடத்த உரிமை அளிக்கப்பட்டிருந்தது. வக்கீல்களோ எதிர் வழக்காடும் சாட்சிகளோ குற்றம் சாட்டப்பட்டவர்களோ நீதிமன்றத்தில் இருக்க வேண்டியதில்லை. மரண தண்டனை உட்பட இந்தப் புதிய நீதிமன்றம் விதிக்கலாம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உரிமை கிடையாது.”

“இப்படிப்பட்ட போலி விசாரணையை ஐந்து மாதங்கள் வரையிலும் நடத்திய பின்பு 1930 அக்டோபரில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை;

7 பேருக்கு ஆயுள் தண்டனையும்; ஏனையோர்களுக்கு நீண்ட கால தண்டனையும் வழங்கப்பட்டன. விடுதலை செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன்.” இவையெல்லாம் அவர் கட்டுரைகளில் காணக்கிடைக்கும் தகவல்கள்.

“1961- ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஆந்திர மாநிலத்தில் விஜய வாடா நகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது காங்கிரஸ் கூடியது. அதில் 1951, 1952 -ல் நடந்த பொதுத் தேர்தலில் நாங்கள் 60 லட்சம் வாக்குகள் பெற்று இந்தியப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தோம்.1957 -ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் ஒரு கோடியே இருபது லட்சம் வாக்குகள் பெற்று பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தோம்” என பதிவு செய்துள்ளார்.

கேரள மாநிலத்தில் ஐந்து முற்போக்கு சுயேட்சைகளின் ஆதரவுடன், பெரும்பான்மை இடங்களைப் பெற்றது, இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கம் அமைத்தது. கேரளத்தில் நடந்த தேவிகுளம் சட்டசபை இடைத் தேர்தலில் எந்த மந்திரியும் தேர்தல் இயக்கத்தில் பங்கு கொள்ள வேண்டாம் என்று ராஜ்ஜிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது… இப்படி நூல் முழுக்க நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுச் செய்திகள் நிறைய உள்ளன. கட்டுரைகளும், சொற்பொழிவுகளும் என்ற இந்நூல் படிப்பதற்குச் சுவையாகவும் அவருடைய சேவைகளை அறிந்து கொள்ளவும் அந்தக்கால அரசியல் சூழலை புரியவும் பேருதவியாக உள்ளது.